ஒடிசாவில் மேலும் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு 90 ஆக உயர்வு
புவனேஸ்வர்: ஒடிசாவில் பத்ராக் மாவட்டத்தில் 40 வயது நபருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் சமீபத்தில் கொல்கத்தாவுக்குச் சென்று வந்ததாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உறுதிசெய்துள்ளது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்ராக்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அரந்துவா கிராம பஞ்சாயத்து மற்றும் பிராமணியகோன் கிராம பஞ்சாயத்து ஆகிய இடங்களில் புதிய கட்டுப்பாட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக பத்ரக் மாவட்ட ஆட்சியர் கியான் தாஸ் தெரிவித்தார். இதன்படி மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 90 பேரில், 56 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் 33 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொற்றுநோயால் புவனேஸ்வரைச் சேர்ந்த 72 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். பத்ராக், பாலசோர் மற்றும் ஜஜ்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் மூன்று மாவட்டங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மூன்று இடங்களிலும் கடந்த ஆறு நாட்களில் 30 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகத் தலைமைச் செயலாளர் ஏ கே திரிபாதி தெரிவித்தார்.