முகப்பு
இந்தியா

சளி மாதிரியை எடுப்பதுதான் அதிக ஆபத்து நிறைந்த பணி:  மகாராஷ்டிர மருத்துவர்

கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரியை எடுப்பதுதான் மிக அதிக ஆபத்து நிறைந்த பணியாக இருக்கிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:


ஔரங்காபாத்: கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரியை எடுப்பதுதான் மிக அதிக ஆபத்து நிறைந்த பணியாக இருக்கிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதித்த நோயளிகளின் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர் புஷ்கர் தஹிவால் இது பற்றி கூறுகையில், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரியை எடுப்பதற்கு வெறும் 30 முதல் 40 நொடிகள்தான் தேவைப்படும். ஆனால் அதுதான் மிக அதிக ஆபத்து நிறைந்த பணியாக இருக்கிறது என்கிறார்.

ஔரங்காபாத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் இவர், ஒரு நாளைக்கு சுமார் 80 முதல் 100 பேரின் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்கிறார்.

நாங்கள் 3 நாட்கள் பணியாற்றுவோம், பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவோம். எங்களுக்கு 6 மணி நேரம்தான் பணி நேரம். அப்போது முழுக்க முழுக்க தற்பாதுகாப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பணி நேரத்தில் எங்களால் தண்ணீர் குடிக்கக் கூட முடியாது. அவ்வளவு கடினமானதாக இருக்கும் என்கிறார்.

ஒரு நபரிடம் இருந்து சளி மற்றும் உமிழ்நீர் மாதிரியை மிகக் குறுகிய நேரத்தில் எடுத்துவிட வேண்டும். அதுதான், அவருக்கும், நமக்கும் பாதுகாப்பை அளிக்கும். இந்த சோதனையை மேற்கொள்ள 10 முதல் 12 செ.மீ. நீளமுள்ள குச்சிகளைப் பயன்படுத்துகிறோம். அதைக் கொண்டு ஒரு நபரின் தொண்டையில் இருந்து உமிழ் நீர் மாதிரியையும், அதை விட சற்று நீளமான, மெல்லிதான குச்சியைக் கொண்டு மூக்கில் இருந்து சளி மாதிரியை எடுக்கிறோம்.

ஒரு குச்சியை அவரது மூக்கு அல்லது தொண்டையில் விட்டதும், அவர் இருமுவது அல்லது தும்முவதற்கு முன்பே, நாங்கள் சளி மற்றும் உமிழ்நீர் மாதிரியை எடுத்து விட வேண்டும். பல் மருத்துவராக இருந்ததால், ஒரு நபரின் வாய்ப்பகுதியை கையாளும் போது நான் மிகவும் கவனமாக இருப்பேன்.

சளி மற்றும் உமிழ் நீர் மாதிரிகளை எடுப்பதோடு, அதனை உடனடியாக மூடி உரிய இடத்தில் சேமித்து வைத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.  ஒரு  வேளை நாங்கள் எடுக்கும் சளி அல்லது உமிழ்நீர் மாதிரிகள் கீழே கொட்டிவிட்டால் அவ்வளவுதான். இவ்வளவையும் நாங்கள் மிகக் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். அங்கு தவறு செய்ய நேரிடவேக் கூடாது என்கிறார் மருத்துவர் தஹிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.