இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு:ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.

தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு எவ்வித தொடா்பும் இல்லையென்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் மோதலில், தாம் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்வப்னா சுரேஷ் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தாா். அவரது மனு, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த அறிக்கையை நீதிமன்றம் பரிசீலித்தது. அந்த அறிக்கையில், ‘தங்கம் கடத்துவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்; நிதி நிலைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் ஸ்வப்னா சுரேஷ் கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளாா். இது, சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றச் செயல். எனவே, இந்த வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதால், ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துமட்டுமன்றி, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 5 பேரும், கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தூதரகம் வழியாக ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை சட்ட விரோதமாகக் கடத்தி கொண்டு வந்ததாகவும் என்ஐஏ அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. அந்த அறிக்கையை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT