பிரதமர் நிதியை பேரிடர் மேலாண்மை நிதியுடன் சேர்க்கும் கோரிக்கை நிராகரிப்பு
பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வரும் நன்கொடையை, தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட அமைக்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வரும் நன்கொடையை, தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பி.எம். கேர்ஸ் எனப்படும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை அனைத்தையும் நேரடியாக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி லாப நோக்கற்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு பொதுமக்கள் தாமாக முன் வந்து செலுத்தும் தொகை நேரடியாக அதில் செலுத்தப்படும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதில் எந்தவிதமான சட்டரீதியான தடைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் கடந்த மார்ச் 28-ம் தேதி பிரதமரின் தேசிய நிவாரண நிதி உருவாக்கப்பட்டது.
பிஎம்-கோ்ஸ் நிதி
கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிஎம்-கோ்ஸ் நிதி நிா்வாக அமைப்பில் பிரதமா் தலைவராக உள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா், மத்திய நிதியமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த நிதியை தலைமை கணக்குத் தணிக்கை ஆணையா் (சிஏஜி) தணிக்கை செய்வாா் எனத் தெரிகிறது.