காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்? காணொலி வாயிலாக செயற்குழு கூடியது
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், தில்லியில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், தில்லியில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்திருப்பதாக தகவலிறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று நடைபெறும் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கட்சியை கூட்டுத் தலைமை வழிநடத்த வேண்டும்; அமைப்பு ரீதியாகவும், தலைமையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் அண்மையில் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் கட்சியில் தேவையான முக்கிய சீர்திருத்தங்களை செய்வது, 1970-களில் இருந்த மத்திய நாடாளுமன்றக் குழுவை மீண்டும் அமைப்பது, மாநில கமிட்டிகளுக்கு அதிகாரமளித்தல் போன்ற சீர்திருத்தங்களை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் எளிதாகத் தொடர்பு கொள்ளும் வகையில் முழு நேரத் தலைவரை நியமிப்பதுடன், கீழ் மட்டத்திலிருந்து செயற்குழு வரை அனைத்து நிலைகளிலும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த வேண்டும்.
காங்கிரஸ் செயற்குழுவானது கட்சியைத் திறம்பட வழிநடத்தவில்லை. பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையை ஒன்று திரட்டவில்லை என அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் முதல்வர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், ராஜிந்தர் கௌர் பட்டல், முன்னாள் அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக், கபில் சிபல், எம்.வீரப்ப மொய்லி, சசி தரூர், எம்.பி. மணீஷ் திவாரி மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அதேசமயம், ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவர்கள், நேரு குடும்பத்தினரின் பாரம்பரிய தலைமை தொடர வேண்டும் என்றும், ராகுல் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கடிதம் அளித்தனர்.
இதனிடையே, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாகவும், அதை அவர் தனது நெருங்கிய சகாக்களிடம் அண்மையில் வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வது குறித்து சோனியா அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிகிறது.