முகப்பு
இந்தியா

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காதது மாநிலங்களுக்கு இழைக்கும் துரோகம்: சோனியா

​மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காதது மாநில அரசுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விமரிசித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:


மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காதது மாநில அரசுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விமரிசித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதலவர்களுடனும், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுடனும் சோனியா காந்தி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஜிஎஸ்டி இழப்பீடு, ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

"மத்திய - மாநில அரசு உறவுகள் பற்றி பல்வேறு விவகாரங்கள் உள்ளன. 3 வாரங்களில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நாம் கலந்துரையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான், ஒருங்கிணைந்த அணுகுமுறை இருக்கும். 

ஜிஎஸ்டி இழப்பீடு மிகப் பெரிய பிரச்னை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி, மாநிலங்களுக்கு உரிய நேரங்களில் ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. நிலுவைத் தொகை பெருகியுள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி நிலை மோசமாக பாதித்துள்ளது. 

ஆகஸ்ட் 11, 2020-இல் நடைபெற்ற நிதித் துறை நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான கட்டாயம் வழங்கப்பட வேண்டிய 14 சதவிகித இழப்பீட்டை வழங்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என்பதை நிதித் துறைச் செயலர் தெளிவுபடுத்திவிட்டார். மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க நரேந்திர மோடி அரசு மறுப்பது துரோகத்துக்கு சற்றும் இழைத்ததில்லை. மாநில அரசுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகம்.   

5 ஆண்டு காலத்துக்கு கட்டாயம் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், தேச நலனுக்காக வரிவிதிப்பில் அரசியலமைப்பு வழங்கிய அதிகாரங்களைக் கைவிட மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. இதன் காரணமாகவே ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது. 

மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமலேயே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2020-க்கு எதிராக தேசமே கூக்குரல் எழுப்பி வருகிறது. 

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துகள் விற்கப்படுகின்றன. 6 விமான நிலையங்கள் தனியார் வசம் சென்றுவிட்டன. ரயில்வேவும் தனியார்மயமாக்கப்படுகிறது. 

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அறிவிப்புகள் கவலையளிக்கிறது. அது பின்னடைவானது. மாணவர்கள் மற்றும் தேர்வுகளின் மற்ற பிரச்னைகளும் அக்கறையின்றி கையாளப்படுகிறது" என்றார் சோனியா காந்தி.

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →