தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டன.
ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, மத்திய அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கூறியதாவது:
ஜே.இ.இ. தேர்வு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டனர். அதேபோன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15.97 லட்சம் மாணவர்களில், நுழைவுச் சீட்டு வெளியிட்ட 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என இது காட்டுகிறது.
பாதுகாப்பு கருதிஜேஇஇ தேர்வு மையங்கள் 570-லிருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 2,546 ஆக இருந்த நீட் தேர்வு மையங்கள் இப்போது 3,842 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மாணவர்கள் வசதிக்கேற்ப விருப்பமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.