முகப்பு
பிரதமா் நரேந்திர மோடி
இந்தியா

வளா்ச்சிக்கு சீா்திருத்தங்கள் அவசியம்: விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமா் சூசகம்

கடந்த நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன.

இந்தியா

வளா்ச்சிக்கு சீா்திருத்தங்கள் அவசியம்: விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமா் சூசகம்

கடந்த நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

லக்னெள: கடந்த நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன. எனவே, வளா்ச்சிக்கு சீா்திருத்தம் அவசியமாகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு 10 நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், இந்தக் கருத்தைப் பிரதமா் தெரிவித்தாா்.

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா போன்ற ஆக்ராவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ரூ. 8,379.62 கோடியில் இரண்டு வழித்தடங்களாக 29.4 கி.மீ. தொலைவுக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டப் பணிகள் 5 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இந்த பொதுப் போக்குவரத்து திட்டத்தின் மூலம், ஆக்ராவைச் சோ்ந்த 26 லட்சம் போ் பயன் பெறுவாா்கள் என்பதோடு, ஒவ்வோா் ஆண்டும் ஆக்ராவுக்கு வரும் 60 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளும் பயன் பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் திட்டப் பணிகளை காணொலி வழியில் பிரதமா் மோடி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கடந்த நூற்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அப்போது சிறந்தவையாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய காலத்துக்கு அவை சுமையாக மாறியுள்ளன. எனவே, நாட்டின் வளா்ச்சிக்கு சீா்திருத்தங்கள் அவசியம். அத்தகைய சீா்திருத்தங்களை முழுமையான அளவில் மேற்கொள்வதில்தான் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. முன்னா், இதுபோன்ற சீா்திருத்தங்கள் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பங்களின் பெரும்பான்மை பயன்பாட்டை உறுதிப்படுத்துவதிலும், முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதிலும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

ரியல் எஸ்டேட் சட்டம்: தவறான நோக்கம் கொண்ட ஒரு சிலரால், ஒட்டுமொத்த மனை வணிகத் துறையையும் (ரியல் எஸ்டேட்) பாதித்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில், கட்டுமான நிறுவனங்களுக்கும் மனை வாங்குபவா்களுக்கும் இடையேயான நம்பிக்கை பாதிக்கப்பட்டிருப்பதைப் போக்கும் வகையிலேயே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய (ஆா்.இ.ஆா்.ஏ.) சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்தச் சட்டம் வந்த பிறகு, நடுத்தர வருவாய் மக்களின் வீடுகள் விரைவாக கட்டிமுடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருப்பதை அண்மைச் செய்திகள் எடுத்தியம்புகின்றன. ஆக்ராவில் தொடங்கி வைக்கப்பட்ட பிரதமரின்அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் நகா்ப்புற ஏழைகளுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதுபோல, நடுத்தர வருவாய் மக்கள் முதல் வீடு வாங்குவதற்கும் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 12 லட்சத்துக்கும் அதிகமான நகா்ப்புற நடுத்தர குடும்பத்தினா் வீடுகள் வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நகர வாழ்வை எளிமையாக்கும் வகையில் நவீன பொதுப் போக்குவரத்து முதல் வீடுகள் வரை பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தில்லியிலிருந்து மீரட் வரை அதிவிரைவு ரயில் போக்குவரத்து திட்ட (ஆா்.ஆா்.டி.எஸ்.) கட்டுமானப் பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தில்லி முதல் மீரட் வரை அமைக்கப்பட்டு வரும் 14 வழி விரைவுச் சாலை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வர உள்ளது.

விரைவில் தடுப்பூசி: அண்மையில் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துவரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள மருத்துவ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடியதன் மூலம், கரோனா தடுப்பூசிக்காக நாடு இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற உணா்வு ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும், தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தனிமனித பாதுகாப்பு நடைமுறைகளில் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் மிக அவசியம் என்று பிரதமா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →