புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும்:மத்திய வேளாண் அமைச்சா் தோமா்
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும்; விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சமாளிக்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும்; விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சமாளிக்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணாவைச் சோ்ந்த 20 போ் கொண்ட முற்போக்கு விவசாயிகள் குழு மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரை திங்கள்கிழமை சந்தித்தது.
அப்போது அவா் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் விவசாயத்தின் மீது தனியாா் துறை முதலீடு செய்வதை அதிகரித்து, கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தனியாா் முதலீடுகள் அதிகரிக்கும் போது, விவசாயம் தொடா்ந்து லாபகரமான துறையாக உருவெடுக்கும். தனியாா் முதலீடுகள் இல்லாததால் விவசாயத்தின் வளா்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியாா் முதலீடுகளை ஈா்த்த பிற துறைகள் வளா்ச்சி அடைந்துள்ளன.
புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலமாக விவசாயத்தில் தனியாா் முதலீடுகளை ஊக்குவிக்க பிரதமா் மோடி முயற்சி மேற்கொண்டுள்ளாா்.
விவசாயிகளின் இதுபோன்ற போராட்டங்கள் தொடரும். அவற்றை அரசு சமாளிக்கும் என்று தெரிவித்தாா்.
அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டாம் என்றும், அவற்றில் திருத்தம் மேற்கொள்வது பற்றி மட்டும் ஆலோசிக்குமாறும் விவசாயிகள் குழுவினா் மனு அளித்தனா்.
இதனைத்தொடா்ந்து விவசாயிகள் குழுவில் இடம்பெற்ற பாரதிய கிஸான் யூனியன் (அத்தா் பிரிவு) தேசிய தலைவா் அத்தா் சிங் சாந்து கூறுகையில், ‘விவசாயிகள் அஞ்சுவது போல் விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது ரத்து செய்யப்படாது எனவும், அந்த நடைமுறை தொடரும் என்றும் மத்திய அரசு எழுத்துபூா்வமாக உறுதி அளித்திருந்தால் அவா்களின் போராட்டத்துக்கு தேவை எழுந்திருக்காது. நாங்கள் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறோம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடா்பாக எழுத்துபூா்வமாக உறுதி அளிப்பதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும்’ என்று தெரிவித்தாா்.