இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு விருது: பிரதமர் மோடி பாராட்டு
உலகளவில் முதலீடு செய்வதற்கு விருப்பமான நாடாக உருவாக மத்திய அரசு கவனம் செலுத்தியதற்கு சான்றாக 2020-ஆம் ஆண்டுக்கான "ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது',
உலகளவில் முதலீடு செய்வதற்கு விருப்பமான நாடாக உருவாக மத்திய அரசு கவனம் செலுத்தியதற்கு சான்றாக 2020-ஆம் ஆண்டுக்கான "ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது', இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (யுஎன்சிடிஏடி), 2020 -ஆம் ஆண்டுக்கான இந்த விருது, "முதலீட்டு இந்தியா' (இன்வெஸ்ட் இண்டியா) என்ற அரசு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், "யுஎன்சிடிஏடியின் 2020-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு' விருதை வென்றதற்காக "இன்வெஸ்ட் இந்தியா' வுக்கு வாழ்த்துகள். இந்தியாவை உலகின் விரும்பத்தக்க முதலீட்டு இடமாக மாற்றுவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மத்திய அரசு கவனம் செலுத்துவதற்கு இது ஒரு சான்று' என்று தெரிவித்துள்ளார்.
1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுஎன்சிடிஏடி, சர்வதேச அளவில் 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்களை நிறுவியுள்ளது. அவர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.