15 கோடியை நெருங்கும் கரோனா பரிசோதனை: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்குவதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்குவதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் தெரிவித்ததாவது:
"கரோனா பரிசோதனை எண்ணிக்கையின் அதிகரிப்பால் இன்றைய தேதியில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 6.50 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.14 சதவிகிதமாக உள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் குறையும்.
Advertisement
தற்போதைய நிலையில் 3,78,909 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் இது வெறும் 3.89 சதவிகிதமே. புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைகிறது.
செவ்வாய்க்கிழமை 10,22,712 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, மொத்த பரிசோதனை எண்ணிக்கை 14,98,35,767 ஆக உயர்ந்துள்ளது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை திறன்15 லட்சமாக உயர்ந்துள்ளது."