நடன முன்னோடி அஸ்தாத் டெபூ காலமானார்
நடனக்கலையின் முன்னோடியான அஸ்தாத் டெபூ மும்பையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
நடன முன்னோடியான அஸ்தாத் டெபூ மும்பையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
கதக் மற்றும் கதகளி ஆகிய நடனங்களை இணைத்து தனித்துவமான நடனத்தை வெளிப்படுத்தியதில் புகழ்பெற்றவர் அஸ்தாத் டெபூ.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், ''உடல்நலக் குறைவு காரணமாக (வியாழக்கிழமை) அவதிப்பட்டு வந்த அஸ்தாத் டெபூ மும்பையிலுள்ள இல்லத்தில் டிசம்பர் 10-ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார்.
கலைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் மரபு வழி மாறாத நடனத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது பரந்த மற்றும் அன்பான இதயம் ஆயிரக்கணக்கான நண்பர்களையும், ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத்தந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''அவரது மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சக நடனக் கலைஞர்களுக்கும் மதிப்பிட முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை இழந்து நாங்கள் வாடுகிறோம்'' என்று குடும்பத்தினரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடனக்கலையின் முன்னோடியான அஸ்தாத் டெபூ, குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் 1947 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே குரு பிரஹலாத் தாஸிடம் கதக் நடனத்தை கற்றுத் தேர்ந்தார்.
அதன்பிறகு குரு கே.பனிக்கரிடம் கதகளி நடனத்தை பயின்றார். பின்னர் பாரம்பரியத்தையும், சமகால ரசனையையும் இணைத்து தமது பாணியிலான நடனத்தை அமைத்துக்கொண்டார்.
அரை நூற்றாண்டுகாலமாக நடனத்துறையில் இருந்த அவர், தனியாகவும், குழுவாகவும், 70க்கும் அதிகமான நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார்.
2002-ஆம் ஆண்டில், அஸ்தாத் டெபூ நடன அறக்கட்டளையை நிறுவி, காது கேளாதோர் உள்பட மாற்றுத்திறனாளிகளுக்காக ஆக்கப்பூர்வமான சேவைகளை மேற்கொண்டார்.
இந்திய மற்றும் மேற்கத்திய நடனத்தை ஒருங்கிணைத்து புதிய வடிவிலான மேடை நடனத்தை உருவாக்கியதற்காக 2007-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவர் திரைப்படத்துறையிலும் முன்னோடி இயக்குநர்களுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.