கரோனா நோயாளிகளுக்காக தால் ஏரியில் படகு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியவர்
சுகாதார வசதிகளுடன் கூடிய முதல் ஆம்புலன்ஸ் படகு சேவை ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள தால் ஏரியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதிகளுடன் கூடிய முதல் படகு ஆம்புலன்ஸ் சேவை ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள தால் ஏரியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கியவர் தாரிக் அகமது பட்லூ.
ஏரியில் படகு ஆம்புலன்ஸ் சேவை குறித்து பட்லூ கூறியதாவது:
இரு மாதங்களுக்கு முன்பு எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போது மருத்துவமனைக்குச் செல்ல எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இறுதியாக நண்பர் ஒருவர் படகு எடுத்து வந்தார். இது என்னை மிகவும் காயப்படுத்தியது. எனவே, மக்களின் அவசர சேவைக்காக சுகாதார வசதிகளுடன் கூடிய ஒரு படகினை ஏற்படுத்த முடிவு செய்தேன்.
தால் ஏரிப் பகுதியில் வசிக்கும் மக்கள் பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இவர்கள் படகில் செல்லும்போதே தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கும்பொருட்டு படகில் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஈ.சி.ஜி, ஆக்ஸிமீட்டர், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளேன். விரைவில் கட்டணமில்லா தொடர்பு எண் ஒன்றையும் மக்களிடம் அறிமுகப்படுத்துவேன். தால் ஏரி குடியிருப்பாளர்களின் உயிரைக் காப்பாற்ற இது முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.
ஆம்புலன்ஸ் படகின் மெக்கானிக் ரியாஸ் அஹ்மத், 'படகு மரம் மற்றும் இரும்புத் தாள்களால் ஆனது. 35 அடி நீளமும், நடுவில் ஆறு அடி இடமும் இருக்கும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு முன் வந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறோம். எனவே நோயாளிகள் மருத்துவமனையை அடையும் முன்னர் தேவையான முதலுதவி செய்ய பயன்படும். சுற்றுலாப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும். இந்த வசதி மூலம் தேவைப்படுவோருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்' என்று தெரிவித்தார்.