‘எல்லைப் பிரச்னையை விவாதிக்கும் உரிமையை உறுதிபடுத்துங்கள்’: ராகுல்காந்தி
நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதன்கிழமை நாட்டின் ராணுவப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்டை நாடுகளின் எல்லை அத்துமீறல்கள் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில் வியாழக்கிழமை மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு அவர் கடிதம் எழுதினார். அதில் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக ஆயுதப்படைகளின் சீருடை பற்றி விவாதிப்பதிலேயே நேரம் வீணடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பாராளுமன்ற குழு கூட்டங்களில் வெளிப்படுத்தும் உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
சீன ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் பிரச்னைகளை எழுப்ப முயன்றபோது பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜூவல் ஓரம் ராகுல்காந்தியை பேச அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.