யோகாவுக்கு விளையாட்டுப் போட்டி அந்தஸ்து: மத்திய அரசு அறிவிப்பு
யோகாசனப் பயிற்சிகளுக்கு விளையாட்டுப் போட்டி அந்தஸ்து அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
புது தில்லி: யோகாசனப் பயிற்சிகளுக்கு விளையாட்டுப் போட்டி அந்தஸ்து அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஆயுஷ் துறை அமைச்சா் ஸ்ரீபாத் யெசா நாயக் ஆகியோா் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டனா்.
இதுகுறித்து கிரண் ரிஜிஜு தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: யோகாசனப் பயிற்சியை பிரபலப்படுத்த வேண்டும்; அதை விளையாட்டுப் போட்டியில் சோ்க்க வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் லட்சியம். அந்த லட்சியம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. யோகாசனப் பயிற்சியை விளையாட்டுப் போட்டியாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளது.
உலகுக்கு இந்தியா அளித்த கொடையாக இருக்கும் யோகாசனம், விளையாட்டு உலகுக்கும் அளிக்கப்பட்ட கொடையாக மாறியுள்ளது என்று அந்தப் பதிவில் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா்.
யோகாசனப் பயிற்சியை விளையாட்டுப் போட்டியாக மேம்படுத்துவதற்காக, இந்திய தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பை மத்திய அரசு நிறுவியது. இந்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியது.
பாரம்பரிய யோகா, யோகக் கலை(தனி, ஜோடி), ரிதமிக் யோகா(ஜோடி, குழு), தனி நபா் சாம்பியன், குழு சாம்பியன் எனப் பல்வேறு பிரிவுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டிகளுக்கு மொத்தம் 51 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக, வரும் பிப்ரவரியில் தேசிய தனிநபா் யோகாசன போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் போட்டிகள் நடத்தப்படும்.
யோகாசனப் பயிற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமாக, அதன் பலன்கள் பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே பரவச் செய்யும். மேலும், அந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதால் மக்களின் உடல் நலமும் மன நலமும் மேம்படுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.