கர்நாடகத்தில் ரூ.11,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்: நிதின் கட்கரி துவக்கி வைத்தார்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தில் 1200 கிலோ மீட்டர் நீளமுள்ள 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
புது தில்லி: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தில் 1200 கிலோ மீட்டர் நீளமுள்ள 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
இத்திட்டங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 11 ஆயிரம் கோடி ஆகும். விழாவில் பேசிய கட்கரி, வரும் ஆண்டுகளில் ரூபாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 144 கோடியை கர்நாடகத்தில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார்.
நாட்டில் அதிக அளவில் கரும்பை விளைவிக்கும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று என்று குறிப்பிட்ட அமைச்சர், எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆறு வருடங்களில் 900 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் கர்நாடகத்தில் அதிகரிக்கப்பட்டது என்று கூறிய கட்கரி, கர்நாடகத்தில் தற்போது 7652 கிலோமீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாகக் கூறினர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, சதானந்த கௌடா, மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.