நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறைக்கு முக்கிய பங்கு: பிரதமர்
நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறையினருக்கு மிக முக்கியப் பங்குள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறையினருக்கு மிக முக்கியப் பங்குள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டை தொழில் புரட்சியின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கு தொழில்துறையினர் உதவ வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அசோசம் அமைப்பின் கூட்டத்தில் தொழில்துறை வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, ''வர்த்தகத்தை எளிமையாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீர்திருத்தம், தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கம், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை 'ஏன் இந்தியா?' என்ற நிலையிலிருந்து 'இந்தியாவால் ஏன் முடியாது?' என்ற நிலைக்கு முன்னேற்றியுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறை வல்லுநர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். பல்லாயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளனர்.
அடுத்தடுத்து வரும் ஆண்டுகள் உலக அளவில் இந்தியா தனது இலக்கை நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், இந்தியர்களின் கனவுகளையும், அர்ப்பணிப்பையும் சோதிப்பதாக இருக்க வேண்டும்.
சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக உற்பத்தித் துறையில் மத்திய அரசு அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா முழுவதுமாக சுயசார்பு அடைவது மட்டுமல்லாமல், எத்தனை விரைவாக அந்த இலக்கு எட்டப்படுகிறது என்பதும் மிக முக்கியம்.
கரோனா காலத்திலும் அந்நிய முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்த்துள்ளதால் மற்ற நாடுகளுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியில் மற்ற நாடுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள்ள நிலையில், இந்தியா புதிய முதலீடுகளை அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.