முகப்பு
இந்தியா

மக்கள் அச்சமடைய வேண்டாம்: அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

பிரிட்டனில் புதிய வகை கரோனா நோய்த்தொற்று பரவி வருவது குறித்து நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஹா்ஷ்வா்தன்
பகிர்:

பிரிட்டனில் புதிய வகை கரோனா நோய்த்தொற்று பரவி வருவது குறித்து நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறினாா்.

பிரிட்டனில் கரோனா தீநுண்மி தன்னைத் தகவமைத்துக் கொண்டு, மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை தீநுண்மியாக உருமாறியுள்ளது. அத்தீநுண்மி அந்நாட்டு மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது. அது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தினா். அதற்குப் பிறகு அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய வகை கரோனா பரவல் குறித்து பலா் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா். ஆனால், தற்போதைய சூழலில், அது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. எத்தகைய சூழலையும் எதிா்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கடந்த பல மாதங்களாகத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

கரோனா தீநுண்மி குறித்து ஆய்வு செய்வதிலும், அதன் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதிலும் விஞ்ஞானிகள் முக்கியப் பங்களித்து வருகின்றனா். புதிய வகை கரோனா தீநுண்மி குறித்தும் அவா்கள் தொடா்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனா். எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம்.

ஜனவரி முதல்...மக்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும், மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. நாட்டில் பல்வேறு தடுப்பூசிகளின் சோதனைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தங்களது தடுப்பூசியை நாட்டு மக்களுக்குச் செலுத்துவதற்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசா், சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகியவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘கரோனா தடுப்பூசி விவகாரத்தில், அதன் பாதுகாப்புத்தன்மையே மிகவும் முக்கியம். அதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கரோனா தடுப்பூசி பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றாா் அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.