இந்தியா

கர்நாடகத்தில் இன்று முதல் இரவில் ஊரடங்கு

DIN


பெங்களூரு: கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்றுப் பரவி வருவதோடு அந்த நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒரு சிலருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முதல் ஜன. 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகலில் வழக்கம்போல செயல்படலாம்.
மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின்போது வாடகை கார், ஆட்டோ உள்பட தனியார் வாகனங்கள் இரவில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் இரவு 9.30 வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளும் இரவில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வியாழக்கிழமை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல்  காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். வெளிநாடுகளிலிருந்து வருபவர் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைக் காண்பிப்பது அவசியம். அந்தப் பரிசோதனையும் 72 மணி நேரத்துக்குள் செய்திருக்க வேண்டும். பெங்களூரு உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத் துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை முழுமையாக சோதனை செய்தபிறகு வெளியில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதை சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகரும் வலியுறுத்தி உள்ளார்.
கலால் துறை அமைச்சர் எச்.நாகேஷ் கூறுகையில், ஊரடங்கினால் மது விற்பனைக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், மக்கள் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஊரடங்கின்போது அரசு உத்தரவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT