இந்தியா

கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கு: பாதிரியார் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

DIN

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், தாமஸ் கோட்டூருக்கு ரூ.6.50 லட்சம் அபராதமும், செபிக்கு ஐந்து லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் சாட்சியங்களை மறைத்தக் குற்றத்துக்கக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாதிரியாரும், கன்னியாஸ்திரீயையும் இணைந்து, மற்றொரு கன்னியாஸ்திரீயை கொலை செய்திருப்பது மிகவும் அரிய வழக்கு என்பதால், குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதம் முன் வைக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான அவர், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார். கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்வென்ட் கிணற்றில் அவர் சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக முதலில் உள்ளூர் காவலர்களும் பின்னர் குற்றப் பிரிவு காவலர்களும் விசாரணை நடத்தினர். இதில் அபயா தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த வழக்கை பின்னர் சிபிஐ விசாரித்தது. இது தற்கொலையல்ல, அபயா கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தபோதிலும், தகுந்த சாட்சியங்கள் இல்லாததாலும், குற்றவாளிகளைக் காணவில்லையென கூறியும் மூன்று முறை விசாரணை நடத்தி முடித்துவைக்கும் அறிக்கையை அளித்தது.

செல்வாக்குள்ள முக்கிய குற்றவாளிகளை சிபிஐ காப்பாற்ற எண்ணுவதாக, 2008-இல் கேரள உயர்நீதிமன்றம் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, நடைபெற்ற தீவிர விசாரணையில், பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த மூவரும் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர்களின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அபயாவுக்குத் தெரிய வந்ததால், அவர் கோடரியின் கைப்பிடியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கியது. இந்த வழக்கில் பாதிரியார் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜெ.சனல்குமார் தீர்ப்பளித்த நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த அபயாவின் பெற்றோரும் கடந்த 2016-இல் அடுத்தடுத்து காலமாகிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT