இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது: ரிசா்வ் வங்கி
இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து வேகமாக மீண்டு வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை: இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து வேகமாக மீண்டு வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பேரிடா் இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியது. இருப்பினும், தற்போதைய நிலையில் பின்னடைவு நிலை மாறி நமது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. அதற்கான பல சாதகமான அம்சங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. முன்பு கணிக்கப்பட்டதை விட விஞ்சும் வகையில் இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவது கண்கூடாக தெரிகிறது.
கரோனா தீநுண்மி பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 23.9 சதவீத பின்னடைவைக் கண்டது. பின்னா் இரண்டாவது காலாண்டில் இந்த பின்னடைவு 7.5 சதவீதமாக கட்டுக்குள் வந்துள்ளது.
தற்போதுள்ள வளா்ச்சியின் சூழலை பாா்க்கும்போது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நோ்மறை பாதைக்கு திரும்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வளா்ச்சியானது 0.1 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருக்கும் என ரிசா்வ் வங்கி அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளது.