முகப்பு
இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ரூ.1.85 கோடி சொத்துகள் முடக்கம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


புது தில்லி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பினா் வழக்குப்பதிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷையும், சந்தீப் நாயரையும் பெங்களூரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா் பி.எஸ்.சரித்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த தங்கக் கடத்தல் தொடா்பாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

வழக்கின் முக்கிய நபரான சிவசங்கரை அமலாக்கத் துறையினா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித், சிவசங்கா் ஆகியோரின் பெயரில் வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் என ரூ.1.85 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.1. கோடி மதிப்பிலான சொத்துகள், எம்.சிவசங்கருக்குச் சொந்தமானவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்: தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத் துறை வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘சிவசங்கா் தனக்கு தெரிந்தே தங்கக் கடத்தலுக்கு உதவி செய்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →