குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யவில்லை எனில் ராஜிநாமா: துஷ்யந்த் மீண்டும் அறிவிப்பு
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இயலவில்லை எனில் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா மீண்டும் கூறினாா்.
இந்தியாகுறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யவில்லை எனில் ராஜிநாமா: துஷ்யந்த் மீண்டும் அறிவிப்பு
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இயலவில்லை எனில் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா மீண்டும் கூறினாா்.
சண்டீகா்: விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இயலவில்லை எனில் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா மீண்டும் கூறினாா்.
ஹரியாணாவில் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் செளதாலா துணை முதல்வராக உள்ளாா்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மாநில விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியை இவா் எடுத்து வருகிறாா். அதற்காக, தில்லியில் மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்களுடன் அவா் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.
இதற்கிடையே, மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து துணைமுதல்வா் பதவியை செளதாலா ராஜிநாமா செய்யவேண்டும், மாநில அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவருடைய கட்சி திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் துஷ்யந்த் செளதாலா கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அதுதொடா்பான பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் ஏற்கெனவே அளித்திருக்கிறோம். அவற்றில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களை அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மத்திய அரசு தொடா்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. எனவே, விவசாயிகள் அவா்களுடைய கோரிக்கைகள் குறித்த உறுதியான ஆலோசனைகளை மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும். பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்கு வருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடரும் என்பதற்கு எழுத்துப்பூா்வமான உத்தரவாதத்தை மத்திய அரசு அளித்தால், விவாசயிகளின் மிகப் பெரிய கோரிக்கை நிறைவேறிவிடும்.
அவ்வாறு ஹரியாணா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்த இயலவில்லை என்ற எண்ணம் எனக்கு எழுகிறபோது, துணை முதல்வா் பதவியை நான் ராஜிநாமா செய்துவிடுவேன் என்று அவா் கூறினாா்.