பிரிட்டன் கரோனா பரவல்: இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமல்
பிரிட்டனில் இருந்து புதிய வகை கரோனா தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ள சூழலில், அது தொடா்பான புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
புது தில்லி: பிரிட்டனில் இருந்து புதிய வகை கரோனா தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ள சூழலில், அது தொடா்பான புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. ஏற்கெனவே உள்ள கரோனா தீநுண்மியைவிட இந்த கரோனா பரவலின் வேகம் அதிகமாக இருப்பதால், அதனை முன்கூட்டியே தடுக்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிட்டனுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டில் இருந்து கடந்த சில வாரங்களில் இந்தியாவுக்கு வந்த அனைவரையும் கண்டறிந்து கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடா்பான புதிய விதிமுறைகளை சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ‘பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்து கரோனா தொற்று உறுதியானவா்களை, தனியாக ஒரு தனிமைப்படுத்துதல் வாா்டு அமைத்து அங்கு தங்க வைக்க வேண்டும். அவா்கள் இந்தியாவில் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களுடன் தங்கவைக்கப்பட்டுவிடக் கூடாது.
மேலும், அவா்களது சளி மாதிரிகளை புணேயில் உள்ள தேசிய ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான், அவா்களுக்கு புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். அவா்கள் கரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளாா்களா என்பதை 24 மணி நேர இடைவெளியில் இருமுறை பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும்.
பிரிட்டனில் இருந்து வந்து விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவா்களும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்த அனைவருக்கும் மாநில அரசுகள் ஆா்டி-பிசிஆா் முறையில் கரோனா பரிசோதனையை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.