முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விலங்குகளின் தோழன்...

நியூயார்க் நகரில் 160 ஆண்டுகளுக்கு முன்னால் வீதிகளில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வாடகை 'கோச்'சுகளும், சுமைகளை இழுத்துச் செல்லும் பார வண்டிகளும் நிறைய இருந்தன.

Updated On : 15 மார்ச், 2026 at 11:10 AM
பகிர்:

சந்திரிகா ரத்தினவேல்

நியூயார்க் நகரில் 160 ஆண்டுகளுக்கு முன்னால் வீதிகளில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வாடகை 'கோச்'சுகளும், சுமைகளை இழுத்துச் செல்லும் பார வண்டிகளும் நிறைய இருந்தன. அவற்றில் இரக்கமற்ற வியாபாரிகள் வண்டிகளில் அளவுக்கு மீறி பாரம் ஏற்றினர். வண்டியை இழுக்க முடியாமல், குதிரைகள் தடுமாறியதோடு, தத்தளித்தன. வண்டிக்காரர்கள் சாட்டையால் அவைகளை அடித்து விரட்டினர்.

1866-ஆம் ஆண்டில் நியூயார்க்கை விட்டு வெளியே போகிற சாலையில் இப்படி ஒரு வண்டி யும் குதிரையும் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மினுக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் கோட்டும் சூட்டும் தொப்பியும் தரித்த ஒருவர் தோன்றினார்.

'நண்பரே... குதிரைகளை இப்படி அடிக்காதீர்கள். பாவம். வண்டியில் அளவுக்கு மீறிய பாரத்தை ஏற்றிவிட்டு, அதை இழுக்கச் சொன்னால் எப்படி இருக்கும்? தயவு செய்து குதிரையை அடித்துத் துன்புறுத்தாதீர்கள்!' என்று கூறி ஹென்றி பர்க் தடுத்தார்.

முரடரான வண்டிக்காரர், 'என் குதிரையை நான் அடிக்கக் கூடாதா? இதைத் தடுக்க நீர் யார்?' என்று கோபத்துடன் கூவிக் கொண்டே குதிரையை மேலும் மேலும் அடித்தான் வண்டிக்காரன்.

தொப்பிக்காரர் தன் கைத்தடியை உயர்த்தி அருகில் இருந்த காவலரை அழைத்து, 'வாயில்லா விலங்குக்குக் கொடுமை செய்த குற்றத்துக்காக இவனைக் கைது செய்யுங்கள்' என்று கட்டளையிட்டார்.

நீதிமன்றத்தில் அந்த வண்டிக்காரர், 'என் வேலையில் குறுக்கிட இவருக்கு எந்த உரிமையும் இல்லை' என்று வாதித்தார். ஆனாலும், இந்த வாதம் எடுபடவில்லை. இந்தக் குற்றத்துக்காக பத்து டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

விலங்குகளுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் அமெரிக்கச் சங்கத்தின் சட்டபூர்வமான முதல் வழக்கு அது. அந்த 1866-ஆம் ஆண்டில்தான் அந்தச் சங்கத்தை கோட்டும், சூட்டும் அணிந்த அந்தத் தொப்பிக்காரரான ஹென்றி பர்க் தொடங்கியிருந்தார்.

கப்பல் கட்டும் தொழில் செய்துவந்த குடும்பத்தில் பிறந்த ஹென்றி பர்க், பட்டப் படிப்பை முடித்தார். அவர் ஒருமுறை உலகம் முழுவதையும் சுற்றி வந்தார். சொந்த ஊர் திரும்பியவரை அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் (1861-65), ரஷியாவில் அமெரிக்காவின் தூதராக நியமித்தார். ஹென்றி பர்க்கும் ரஷியாவின் பிரபல நகரமான பீட்டர்ஸ் பர்க்குக்குச் சென்று பதவியேற்றார். அப்போது அந்த நகரம் ஜார் சக்கரவர்த்தியின் தலைநகராக இருந்தது.

ஒருநாள் பர்க் ஒரு கோச்சில் சென்றார். குதிரை வண்டியை இழுக்க முடியாமல் தவிப்பதையும், ரஷிய வண்டிக்காரர் சிறிதும் இரக்கமின்றி அதைச் சாட்டையால் அடிப்பதையும் பர்க் பார்த்தார். உடனே அவர் தனது கோச்சில் இருந்து இறங்கி ஓடிவந்து வண்டிக்காரரிடம் இருந்த சாட்டையைப் பிடுங்கினார். வண்டிக்காரரும் பர்க் அணிந்திருந்த அதிகாரச் சின்னத்தைக் கண்டதும் பணிந்துவிட்டார்.

வண்டிக்காரருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்த ஹென்றி பர்க், தான் வீடு திரும்பியதும் தனது தூதர் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போதே அவருடைய வாழ்க்கையில் புதிய குறிக்கோள் உருவாகியது. உடனே ரஷியாவை விட்டு, அமெரிக்காவுக்குத் திரும்பினார்.

இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து 1866-இல் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்கும் சட்டபூர்வமான அமெரிக்கச் சங்கத்தை (ஏ.எஸ்.பி.சி.ஏ.) ஆரம்பித்தார். இது 'ஆஸ்பிகா' என அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் (1865-69) என்பவர் காலத்தில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ஹென்றி பர்க் காலத்தில் வெளியூர் செல்லும் பாரவண்டிகள் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தன.

அரசிடம் விரைவிலேயே பர்க் விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்கும் பணியாளர்களுக்கென்று விசேஷ சீருடையும், கொடுமை செய்வோரைக் கைது செய்யும் அதிகாரமும் பெற்றார். அளவுக்கு அதிகமாகச் சுமை ஏற்றப்பட்ட குதிரையைக் கண்டதும் எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின.

இப்படி நான்கு ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பின்னர், பர்க் 'ஆஸ்பிகா'வுக்கு நியூயார்க் நகரத்துக்கான சின்னத்தைப் பெற்றார். இதைக் கொண்டு அவர் நகரின் எந்த மூலையிலும் பிராணிகளைக் காக்க முடிந்தது.

விலங்குகளின் தோழனாக விளங்கிய இவரது தொண்டு உலகம் முழுவதும் பரந்து விரிந்து ஆலமரமாகிவிட்டது. வாழ்நாள் முழுவதும் விலங்குகளின் அன்புத் தோழனாக வாழ்ந்த ஹென்றி பர்க், தனது 75-ஆம் வயதில் மறைவுற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →