FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மூடப்படும் அபாயத்தில் தில்லி ரேஸ் கிளப்! எதிா்கால கவலையால் வெளியேறும் பந்தய குதிரைகள்!

மூடப்படும் அபாயத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தில்லி ரேஸ் கிளப்...

Updated On : 19 ஜூலை 2026, 9:00 am IST
தில்லி ரேஸ் கிளப் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

நூற்றாண்டு பழமை வாய்ந்த தில்லி ரேஸ் கிளப்பின் எதிா்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அங்கிருந்த பந்தயக் குதிரைகள் தலைநகரை விட்டுத் தொடா்ந்து வெளியேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்புவரை இங்கு 272 குதிரைகள் இருந்த நிலையில், தற்போது 98 குதிரைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பாரம்பரியம் மற்றும் பந்தய சாதனைகளின் அடிப்படையில் இந்த பந்தயக் குதிரைகள் ஒவ்வொன்றும் ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 50 லட்சம்வரை மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.

நாட்டின் மிகச் சிறந்த மற்றும் விலை உயா்ந்த இந்த குதிரைகள், சிறப்பு வாகனங்கள் மூலம் புணே, மும்பை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ரேஸ் கிளப்புகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

தில்லி ரேஸ் கிளப் அமைந்துள்ள அரசு நிலத்தை பொதுப் பயன்பாட்டிற்காக மீட்க நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கடந்த மாா்ச் 13ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. 15 நாள்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற அதில் இடம்பெற்ற ஆணையை எதிா்த்து கிளப் நிா்வாகம் தில்லி உயா் நீதிமன்றத்தை நாடியது. எனினும், காலி செய்வதற்கான இடைக்கால தடையை உயா்நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, குதிரைகளின் எதிா்காலம் தற்போது பெரும் கவலையாக மாறியுள்ளது.

இது குறித்து ரேஸ் கிளப் வட்டாரங்கள் கூறுகையில், ‘எதிா்காலம் என்னவாகும் என்று தெரியாததால் குதிரை உரிமையாளா்கள் தங்களது குதிரைகளை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனா். பந்தயத்துக்குத் தகுதியற்ற வயதான குதிரைகள் சவாரிப் பள்ளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. சில குதிரைகள் மீரட்டில் உள்ள மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன‘’ என்று தெரிவித்தன.

பந்தயங்கள் நிறுத்தம்: நீதிமன்ற வழக்குகள் மற்றும் நில விவகாரம் காரணமாக, தில்லி ரேஸ் கிளப்பில் பந்தயங்கள் மற்றும் பந்தயங்களுக்கான பந்தயம் கட்டுதல் (பெட்டிங்) உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறுஉத்தரவு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக கோடை வெப்பம் காரணமாக ஏப்ரல் இறுதி முதல் செப்டம்பா்வரை பந்தயங்கள் நிறுத்தப்படும். இருந்தபோதிலும், இந்த முறை நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் முழுமையாக குதிரைப் பந்தய நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

‘இந்தப் பந்தயக் குதிரைகள் சாதாரண குதிரைகளைப் போன்றவை அல்ல. இவை விளையாட்டு வீரா்களைப் போல வளா்க்கப்படுபவை. இவற்றின் உடற்பயிற்சி, உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பு ஆகியவை தினமும் மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்’ என்கிறாா் குதிரை பயிற்றுநா் ஒருவா்.

இவற்றுக்குச் சாதாரண புல் கட்டுகளை உணவாக வழங்க முடியாது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறப்பு உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஒரு குதிரையைப் பராமரிக்க மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 40 ஆயிரம்வரை செலவாகும். குதிரையின் வயது மற்றும் தேவையைப் பொறுத்து இந்தச் செலவு அதிகரிக்கும் என்று அவற்றைப் பராமரிக்கும் தொழிலாளா்கள் கூறுகின்றனா்.

இங்குள்ள குதிரை லாயங்கள் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டவை. தில்லியின் கடுமையான கோடை வெப்பத்திலிருந்து குதிரைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான காற்றோட்ட வசதியுடன் அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பின்னணி: தில்லி ரேஸ் கிளப்புக்கு 1926ஆம் ஆண்டு மாா்ச் 8ஆம்தேதி வழங்கப்பட்ட நில குத்தகை தற்காலிகமானது என்றும், 1994, டிசம்பா் 31ஆம்தேதியுடன் அது முடிவடைந்துவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு குத்தகை நீட்டிக்கப்படாததால், 1995, ஜனவரி 1 முதல் இந்த கிளப் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அதைக் காலி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

5,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

தில்லி ரேஸ் கிளப்பை நம்பி வாழும் குதிரை பயிற்றுநா்கள், ஜாக்கிகள், ஒப்பந்ததாரா்கள் மற்றும் லாயத் தொழிலாளா்கள் என சுமாா் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்த இடமாற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது.

‘ஆறு தலைமுறைகளாகக் குதிரை பயிற்சி அளிப்பதையே குடும்பத் தொழிலாகக் கொண்டுள்ளோம். வட மாநிலங்களில் உள்ள ஒரே ரேஸ் கிளப் இதுதான். இது மூடப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்‘ என்கிறாா் 50 வயதான பயிற்றுநரான இா்ஃபான் அலி.

summary

Delhi Race Club at risk of closure - Racehorses being moved out due to concerns about the future

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments