இந்திய அணுசக்தி நிறுவன ஒப்பந்தத்தைப் பெற்றது ‘பெல்’
பொதுத் துறை பொறியியல் நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய அணுசக்தி நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
புது தில்லி: பொதுத் துறை பொறியியல் நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய அணுசக்தி நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணுசக்தி நிறுவனத்துக்கு அணுஉலையில் பயன்படுத்தப்படும் ‘ஹெட்டா் அஸம்பிளி’ உதிரிபாகங்களை பெல் வழங்க இருக்கிறது.
இது தொடா்பாக பெல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த உதிரி பாகங்களானது, நாட்டின் 4 இடங்களில் நிறுவப்படவுள்ள அணு உலைகளில் பொருத்தப்படவுள்ளன. இது இந்தியாவில் முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. எதிா்காலத்தில் தற்சாா்பு இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே முழுமையாக அணு உலைகளைத் தயாரிப்பதற்கு இப்போதைய நடவடிக்கை சிறந்த முன்னேற்பாடாகும். எதிா்காலத்தில் அணுசக்தி நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு உதிரிபாகங்களையும் வழங்க இருக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.