வடகிழக்கு தில்லியில் இருதரப்பினர் இடையே மோதல்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
வடகிழக்கு தில்லி பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வடகிழக்கு தில்லி பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தில்லி மௌஜ்பூர் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவு மற்றும் எதிர் தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டு அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், அங்கு வன்முறை சூழல் தென்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக வடகிழக்கு தில்லி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லி டிசிபி வேத் பிரகாஷ் தெரிவிக்கையில், "நாங்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தற்போது அமைதியான சூழலே நிலவுகிறது. தொடர்ந்து மக்களிடம் பேசி வருகிறோம். நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்றார்.
Advertisement
தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தெரிவிக்கையில், "வடகிழக்கு தில்லி பகுதியில் சட்டம் ஒழுங்கை உறுதிபடுத்துமாறு தில்லி காவல் துறை மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அனைவரையும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் காக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கையில்,
"வடகிழக்கு பகுதியில் வன்முறை மற்றும் தீ வைத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக மௌஜ்பூர், கர்தம்பூரி, சந்த் பாக் மற்றும் தயால்பூர் ஆகிய பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பொய்யான செய்திகளை நம்பாமல் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் காக்குமாறு மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீதும், சமூக விரோதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்றனர்.