முகப்பு
இந்தியா

பாஜக தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இயலாது: தில்லி காவல்துறை பதில்

தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய இயலாது என்று தில்லி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
தில்லி உயர் நீதிமன்றம்
பகிர்:


புது தில்லி: தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய இயலாது என்று தில்லி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி உயர் நீதிமன்றத்தில் அந்த மாநில காவல்துறை தரப்பில் அளித்த பதிலில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அவசர கதியில் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, தில்லியில் அமைதி திரும்ப எந்த வகையிலும் உதவாது.

தில்லி வன்முறை தொடர்பாக இதுவரை 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது தகுந்த தருணத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, தற்போதைய சூழ்நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்று பதில் அளித்தது.

இந்த பதிலைக் கேட்ட தில்லி உயர் நீதிமன்றம்,  தில்லி காவல்துறை பிரமாணப் பத்திரமாக பதிலைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

தில்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் முரளீதர், தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவா்கள் அனுராக் தாக்குா், பா்வேஷ் வா்மா, கபில் மிஸ்ரா ஆகிய மூவா் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனித உரிமை ஆா்வலா்களான ஹா்ஷ் மந்திா், ஃபரா நக்வி ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.முரளீதா், தல்வந்த் சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தைப் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது. தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, கல்வீச்சு, வாகனங்களுக்குத் தீவைப்பு என 11 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. ஆனால், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவா்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனா்.

அப்போது, நீதிமன்ற அறைக்கு வந்திருந்த காவல்துறை சிறப்பு ஆணையா் பிரவீா் ரஞ்சன், உடனடியாக இதுதொடா்பாக தில்லி காவல் ஆணையரிடம் விவாதிப்பதாக உறுதியளித்தாா். மேலும், அந்த 3 தலைவா்களின் உரைகள் அடங்கிய விடியோவை ஆய்வு செய்துவிட்டு, வழக்குப்பதிவு செய்வது குறித்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பதிலளிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →