தில்லி வன்முறையின்போது மசூதியும், தர்காவும் சூறையாடப்பட்டன: உள்ளூர்வாசிகள் (விடியோ)
வடகிழக்கு தில்லி பகுதியில் நடைபெற்ற வன்முறையின்போது மசூதியும், தர்காவும் தீயிட்டுக் கொளுத்துவதற்கு முன்பு வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு தில்லி பகுதியில் நடைபெற்ற வன்முறையின்போது மசூதியும், தர்காவும் தீயிட்டுக் கொளுத்துவதற்கு முன்பு வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு தில்லி பகுதியில் ஏற்பட்ட வன்முறையின்போது வன்முறையாளர்கள் மசூதி மீது ஏறி சூறையாடி, காவிக் கொடி ஏற்றுவது போன்ற விடியோ காட்சிகள் வைரலாகப் பரவியது. காவல் துறையினர் தரப்பில் இந்த விடியோ தவறானது எனத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், அது தில்லி வன்முறையின்போது நடைபெற்ற சம்பவம்தான் சில ஊடகங்களும் உறுதிப்படுத்தின.
அந்த மசூதி வடகிழக்கு தில்லியில் அசோக் நகரில் உள்ளது. அதேசமயம், சாந்த் பாக்கில் தர்கா ஒன்றும் உள்ளது. அதுவும் சூறையாடப்பட்டுள்ளது.
அசோக் நகர் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவிக்கையில், செவ்வாய்கிழமை மதியம் அடையாளம் தெரியாத சமூக விரோதக் கும்பல்களால் மசூதி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது என்றனர். இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத நபர் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு சமூக வலைதளங்களின் ஊடாக தெரியவந்தது. சுமார் பகல் 12 மணியளவில் மசூதி சூறையாடப்பட்டதாக காவல் துறையினர் மூலம் தெரிந்துகொண்டோம். இது துரதிருஷ்டவசமானது. உள்ளூர்வாசிகள் யாரும் இதைச் செய்யவில்லை. வெளியாட்கள்தான் இதைச் செய்துள்ளனர்.
இந்த மசூதி மிகவும் பழமை வாய்ந்தது. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அங்கு சில முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்தன. தற்போது அவர்களும் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டனர்" என்றார்.
தர்கா சூறையாடப்பட்டது குறித்து சாந்த் பாக் பகுதியைச் சேர்ந்த சஜ்ஜத் இப்ராஹிம் அவருடைய வேதனையை வெளிப்படுத்துகையில்,
"சாந்த் பீர் பாபா பெரும்பாலும் ஹிந்துக்கள் மத்தியிலேயே வழிபடக் கூடியவர். வழிபாட்டுத் தலத்தை இந்த நிலைமையில் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஏதேனும் ஹிந்து வழிபாட்டுத் தலம் இதுபோன்று சூறையாடப்பட்டுள்ளதா? தர்காவை சூறையாடியவர்கள் இவரது மரபை மறந்துவிட்டனர். இவர் இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஆசீர்வதித்து அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவார்" என்றார்.
சாந்த் பாக் பகுதிக்கு எதிராக பஜன்பூரா உள்ளது. சாந்த் பாக் பகுதியில் 70 சதவீத முஸ்லிம் மக்கள் உள்ளனர். பஜன்பூரா பகுதியில் 80 சதவீத ஹிந்து மக்கள் உள்ளனர். பஜன்பூரா பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், முகமூடி அணிந்திருந்த கும்பல் வேன்களில் வந்ததைப் பார்த்ததாகவும், அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர்வாசிகள் மேலும் கூறுகையில், "மின்சாரம் இல்லாதது, மூடப்பட்ட மருந்தகங்கள், அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பால் கிடைப்பதில் கூட சிக்கல் என இரண்டு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.