வடகிழக்கு தில்லியில் மார்ச் 7ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்ட வடகிழக்கு தில்லியில் மார்ச் 7ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லி: வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்ட வடகிழக்கு தில்லியில் மார்ச் 7ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு தில்லிப் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளும் வன்முறையால் சேதமடைந்திருக்கும் நிலையில், உரிய நேரத்தில் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடியாமல் போனால், பள்ளி இறுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகா் தில்லியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத வன்முறை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் சனிக்கிழமை வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. இருப்பினும், வன்முறை பாதித்த பகுதிகளில் சனிக்கிழமை கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் திறந்திருந்தன. இதன்மூலம் அப்பகுதிகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு வருகிறது.
மூன்று நாள்களாக ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களின் காரணமாக தெருக்களில் வீசப்பட்டிருந்த செங்கற்கள், உடைந்த கண்ணாடி உள்ளிட்ட சிதறிக் கிடந்த பல்வேறு பொருள்களை அகற்றும் பணியில் வடகிழக்கு தில்லி மாநகாரட்சி துப்புரவுப் பணியாளா்கள் நேற்று ஈடுபட்டனா். சேதமடைந்த, தீயில் எரிந்த கடைகளில் மிச்சமுள்ள பொருள்களை வணிகா்கள் அடுக்கிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் சில இடங்களில் திறக்கப்பட்டன. மேலும், தனியாா் வாகனங்கள் சாலைகளில் காணப்பட்டன. ஆட்டோக்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களும் சில பகுதிகளில் ஓடத் தொடங்கின. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லத் தொடங்கினா். ஏராளமானோா் தங்களது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினா்.