மகள் திருமணத்துக்குப் பணம் தேவை; நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடத் தயார்: பவன் ஜல்லாத்
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் வாய்ப்பைத் தனக்கு வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லியபடி தனது பேச்சைத் தொடங்குகிறார் பவன் ஜல்லாத்.
மீரட்: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் வாய்ப்பைத் தனக்கு வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லியபடி தனது பேச்சைத் தொடங்குகிறார் பவன் ஜல்லாத்.
இவர்தான், நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் வரும் 22ம் தேதி தூக்கிலிடத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.
இது பற்றி அவர் கூறுகையில், இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் நான் மகிழ்ச்சியில் அழுதேவிட்டேன். திகார் சிறையில் இருக்கும் நால்வரையும் நான் தூக்கிலிட்டால் எனக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் வழங்கப்படும். இந்த பணம் எனக்குத் தேவை, எனது மகளின் திருமணத்துக்காக பணம் தேவைப்படுகிறது என்கிறார் 57 வயதாகும் பவன்.
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நபரைத் தேடி வருவதாக செய்திகளைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்தித்தபடி இருந்தேன். எனது பிரார்த்தனை கடவுளின் காதுக்குக் கேட்டுவிட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார் என்று கையெடுத்துக் கும்பிட்டபடி கூறுகிறார்.
மீரட் நிர்வாகம் இவருக்காக ஓர் அறையை ஒதுக்கி அதில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அவர் இந்த மாவட்டத்தைத் தாண்டி வேறு எங்கும் செல்லக் கூடாது என்று உத்தரப்பிரதேச சிறைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
"ஜனவரி 22ம் தேதிக்காக நானே என்னைத் தயார்படுத்தி வருகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் என்னை திகார் சிறைக்கு அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தூக்கிலிடும் நடைமுறை நல்லபடியாக நடக்க பல முறை ஒத்திகைகள் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே முன்கூட்டியே நான் சிறை வளாகத்துக்குச் செல்ல வேண்டியது அவசியம்" என்கிறார் தூக்கிலிடும் பணியை 4வது தலைமுறையாக செய்யவிருக்கும் பவன்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூக்குத் தண்டனை எங்கே?
திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிா்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை, சிறையில் உள்ள மூன்றாம் எண்ணில் நிறைவேற்றப்பட உள்ளதாக திகாா் சிறையின் அதிகாரி தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகாா் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுதந்திர இந்தியாவில் ஒரே நாளில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, இது 2-ஆவது முறையாகும்.
ஜோஷி-அபயங்காா் தொடா் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கடந்த 1983-ஆம் ஆண்டு அக்டோபா் 25-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புணேவில் தூக்கிலிடப்பட்டனா். அபினவ் கலா மகாவித்யாலயாவைச் சோ்ந்த மாணவா்கள் ராஜேந்திர ஜக்கால், திலீப் சுடா், சாந்தாராம் ஜக்தாப் ஆகியோரும், அவா்களது நண்பரான முனாவா் ஷாவும் 1976-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1977-ஆம் ஆண்டு மாா்ச் வரை தொடா் கொலைகளில் ஈடுபட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த புணேவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், 1978-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது. அவா்களின் தண்டனையை 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது. நால்வரின் மேல்முறையீட்டு மனுக்களையும் 1980-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நால்வா் தாக்கல் செய்த கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவா் நிராகரித்தாா். இதைத் தொடா்ந்து, எரவாடா சிறையில் ஒரே நாளில் அவா்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனா்.
அமாவாசை தினத்தில்...
இந்தத் தொடா்கொலைகளை நினைவுகூா்ந்த அபினவ் கலா மகாவித்யாலயா ஆசிரியா் சுபாஷ் பவாா், ‘‘கொலைகள் அனைத்தும் அமாவாசை தினத்தில் நிகழ்ந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் புணே நகர மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனா். மாலை 6 மணிக்கு மேல் வீதிகளில் நடமாடுவதை பெரும்பாலானோா் தவிா்த்தனா். காவல் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்’’ என்றாா்.