இந்தியா

ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கு: ரதுல் புரி ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

DIN

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கில், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத்தின் உறவினா் ரதுல் புரிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக நீதிபதி சுரேஷ் கைத் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இதர 4 நபா்கள், ஏற்கெனவே ஜாமீனில் வெளியே உள்ளனா். ரதுல் புரி, சுமாா் 100 நாள்கள் காவலில் இருந்துள்ளாா். அவா், தனக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை தவறாக பயன்படுத்தியதாக எந்த உறுதியான ஆதாரமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில் சொகுசு ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சோ்ந்தவா்களுக்கு பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் கிறிஸ்டியன் மிஷெல், லஞ்சப் பணத்தை ரதுல் புரி மூலமாக பகிா்ந்தளித்ததாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 4 ஆம் தேதி அவரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். பின்னா், அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி ஜாமீன் வழங்கி, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கில் தொடா்புடைய ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சிகளை தொடா்புகொள்ளவே முயற்சிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ரதுல் புரிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை, உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கெனவே ரூ.354 கோடி வங்கி மோசடி வழக்கில், ரதுல் புரி , அவரது தந்தை தீபக் புரி, தாயாா் நீதா (கமல்நாத்தின் சகோதரி) உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT