முகப்பு
இந்தியா

சிஏஏ-வை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் தெரிவிக்க முடியாது: சசி தரூர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த முடியாது என மாநிலங்களால் தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Updated On : 23 ஜனவரி, 2020 at 3:35 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:05 PM


குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த முடியாது என மாநிலங்களால் தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்ததாவது:

"தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதில் மாநிலங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. காரணம், இதைச் செயல்படுத்தும் பணியை மாநில அரசு அதிகாரிகள்தான் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இதற்குத் தேவையான ஆள்பலம் கிடையாது.

Advertisement

குடியுரிமையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது. மாநிலங்களால் குடியுரிமையை வழங்க முடியாது. எனவே, இதை அமல்படுத்துவதற்கும், அமல்படுத்தாமல் இருப்பதற்கும் மாநில அரசிடம் எதுவுமில்லை. மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றலாம், நீதிமன்றத்துக்குச் செல்லலாம். நடைமுறையில் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? 

சிஏஏ-வை அமல்படுத்த முடியாது என மாநில அரசுகள் தெரிவிக்க முடியாது. ஆனால், என்பிஆர்-என்ஆர்சியை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு முக்கியப் பங்கு உள்ளதால், இவற்றை அமல்படுத்த முடியாது என்று அவர்கள் கூறலாம்.

இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் முடிவு செய்து இதை நீக்குவது. இரண்டாவது, மத்திய அரசே இந்தச் சட்டத்தை ரத்து செய்வது. பாஜக எப்போதுமே தவறுகளை ஒப்புக்கொள்ளாது என்பதால் இரண்டாவது வாய்ப்புக்கு சாத்தியமில்லை.  

சிஏஏ-வில் மதம் தொடர்பான பிரிவுகளை நீக்குவது மட்டுமல்லாமல் மேற்கொண்டு சில விஷயங்களையும் மத்திய அரசு செய்ய வேண்டும். பிறப்பிடம் மற்றும் குடியுரிமை குறித்து கேள்விகள் எழுப்பப்படாது மற்றும் என்ஆர்சி தயாரிக்கப்படாது என அரசு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபலும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் தெரிவிக்கையில், "சிஏஏ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், அதை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது" என்றார். பிறகு, இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, கேரள மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்திலும் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது. இதைத் தொடர்ந்து, வரும் 27-ஆம் தேதி மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம்  நிறைவேற்றப்படவுள்ளது. இதுதவிர காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவைகளிலும் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.