முகப்பு
இந்தியா

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய நிர்பயா குற்றவாளியின் மனு தள்ளுபடி

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:40 PM
பகிர்:


புது தில்லி: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், 'குற்றவாளிகளின் சில சட்ட நடைமுறைகள் இன்னும் முடியாததால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார்.

மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவே, இன்றைய தினமே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஷ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஆர். பானுமதி, அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்சய் குமாரின் மனுவை நீதிபதிகளின் அறைக்குள் இன்று விசாரித்தது.

பிறகு அவர்கள் அளித்த உத்தரவில், இந்த கோரிக்கை தொடர்பாக வழக்குரைஞர் வாய்மொழியாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துவிட்டது.

ஏற்கனவே, முகேஷ் மற்றும் வினய் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், இன்று இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும் நோக்கத்தோடு, குற்றவாளிகள் தரப்பில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதும், ஒவ்வொரு மனுவாக தள்ளுபடி செய்யப்படுவதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறிப் போனது. அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட உள்ளனர்.

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

விசாரணை முடிவில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணையை வழங்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வெள்ளியன்று மனுத் தாக்கல் செய்தது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.