மத்தியப் பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 28 அமைச்சர்கள் பதவியேற்பு
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் 12 பேர் உள்பட 28 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய போது அவருடன் பாஜகவில் இணைந்த 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 14 பேர் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே 2 எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது 12 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர்களில் 20 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 8 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உடன் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல் நாத் தலைமையிலான 15 மாத கால ஆட்சி மார்ச் மாதம் பறிபோனது.
இந்த நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் 24 பேரவைத்தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, பாஜகவில் இணைந்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.