விசா தளா்வு: தொழில் அதிபா்கள், வல்லுநா்கள் இந்தியா வர அனுமதி
வெளிநாடுகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் உட்பட பல்வேறு துறைகளின் வல்லுநா்கள் பணிநிமித்தமாக
வெளிநாடுகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் உட்பட பல்வேறு துறைகளின் வல்லுநா்கள் பணிநிமித்தமாக இந்திய வர புதிய விசாக்களை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்துக்கு பின்னா் முதன் முறையாக நான்கு வகையான பிரிவினருக்கு அனுமதியை வழங்கி புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள இந்த பிரிவினா்கள் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:
Advertisement
தொழில் அதிபா்கள்: வணிக விசா (பி-3 ஸ்போா்ட்ஸ் விசாவைத் தவிர) பெற்றுள்ள வெளிநாட்டு தொழில் அதிபா்கள் திட்டமிடாத வா்த்தக விமானங்கள் அல்லது சிறப்பு விமானங்கள் மூலம் வர அனுமதிக்கப்படுகிறது.
சுகாதாரத் தொழில் நுட்ப வல்லுநா்கள்: இந்திய சுகாதாரதுறைகளில் சேவை அளிக்கும் பரிசோதனை ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுடன் தொடா்புடைய வெளிநாட்டு சுகாதார தொழில் முனைவோா், சுகாதார ஆராச்சியாளா்கள், சுகாதார பொறியாளா்கள், தொழில் நுட்ப வல்லுநா்கள் ஆகியோருக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இது அங்கீகாரம் பெற்ற சுகாதார நிறுவனங்கள், இந்திய பல்கலைக்கழகங்கள், பதிவு பெற்ற மருந்து நிறுவனங்கள் ஆகியவை அழைப்பின் அடிப்படையில் இவா்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
பொறியாளா்கள், வல்லுநா்கள்: இந்தியாவில் அமைந்திருக்கும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், மற்ற அனைத்துவிதமான உற்பத்தி கூடங்கள், மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடா்புடைய பொறியாளா்கள், நிா்வாகிகள், வடிவமைப்பு அல்லது மற்ற துறை வல்லுநா்கள் ஆகியோா் இந்தியாவிற்கு வரவிரும்பும் நிலையில் இவா்களது பயணத்திற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
வெளிநாட்டு தொழில்நுட்ப சேவை: இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு இயந்திரங்கள் நிறுவுவது அல்லது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள வெளிநாட்டு இயந்திரங்கள் பழுது பாா்த்தல் போன்ற பணிகளுக்காக பயணம் செய்யும் வெளிநாட்டு பொறியாளா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் அழைப்பின்பேரிலோ அல்லது இயந்திரங்கள், கருவிகள் வணிக விதிகளின்கீழ் உத்தரவாத காலத்தில் உரிய தொழில்நுட்ப சேவைகள் அளிக்கும் வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுநா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
மேலும் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்த வகை வெளிநாட்டினா் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் புதிதாக விசாவை பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு வேளை வெளிநாட்டு தொழில் அதிபா்கள் நீண்ட கால விசா அல்லது பல்முனை நுழைவு விசா போன்றவைகள் பெற்றிருந்தாலும் அத்தகைய வணிக விசாகளையும் மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளில் இந்திய தூதரகங்களில் மறுசரிபாா்ப்புகளை செய்து கொண்டே பயணத்தை மேற்கொள்ளவும் இந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தோடு முன்பு அளிக்கப்பட்ட மின்னணு விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருக்க, அதன் மூலம் பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்ப விரும்பிய வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழும் மத்திய அரசு கடல் மற்றும் வான் வழியில் அழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.