அன்று ஹாட்ஸ்பாட்.. இன்று 7 நாள்களாக உயிரிழப்பு இல்லை: இது தாராவி கதை
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், கடந்த 7 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை, பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், கடந்த 7 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை, பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது கரோனாவிலிருந்து தாராவி மீண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய மாநிலம் மகாராஷ்டிரம். மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நகரம் மும்பை. ஏப்ரல் 1-ஆம் தேதி மும்பை தாராவியில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய நெருக்கமான பகுதி என்பதால், தாராவியின் முதல் பாதிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மும்பை மாநகராட்சியின் வசம் இருக்கும் தரவுகளின்படி, தாராவியில் 8.5 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
ஆனால், அந்தப் பகுதியில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 நாள்களாக தாராவியில் புதிதாக யாரும் பலியாகவில்லை. அதேசமயம், தாராவியில் நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
மும்பை மாநகராட்சியின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஜூன் 1-ஆம் தேதி 34 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுவே, ஜூன் 7-ஆம் தேதி வெறும் 13 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, ஜூன் 6-ஆம் தேதி 10 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, தாராவியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மே 30-ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக யாரும் பலியாகாதது நற்செய்தியை உணர்த்துகிறது.
தாராவியிலிருந்து மொத்தம் 8,500 பேர் பல்வேறு இடங்களிலுள்ள அரசு தனிமை மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4,000 பேருக்கு மும்பை மாநகராட்சி பரிசோதனை மேற்கொண்டது. தாராவியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களில் 1,350 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
தாராவியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டப் பொறுப்பாளர் கிரன் திவாகர் இதுபற்றி தெரிவித்ததாவது:
"தாராவிப் பகுதியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தீவிரக் கண்காணிப்பே உதவியது. மும்பை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தனியார் கிளினிக் மருத்துவர்கள், நகராட்சி மருந்தகம் மற்றும் பல என வீடுவீடாகச் சென்று சுமார் 6 முதல் 7 லட்சம் பேர் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், ஆக்ஸிஜன் நிலை மற்றும் இதர அறிகுறி உடையவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு முன்கூட்டியே பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டோம்."