துபை: கர்ப்பிணி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பிய ஒரு மாதத்தில் கணவன் உயிரிழந்த சோகம்!
மனைவியை துபையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பிய ஒரு மாதத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை துபையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பிய ஒரு மாதத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான நிதின் சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிரா இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே துபையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
நிதின் பொறியாளர் மட்டுமின்றி ஒரு சமூக ஆர்வலர். ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உதவி செய்வது என சமூக சேவைகளில் ஈடுபட்டவர்.
இந்நிலையில் மனைவி ஆதிரா கருவுற்றிருந்த நிலையில், அவரை சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சி செய்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் துபையில் இருந்து தனது மனைவியை கேரளத்துக்கு அனுப்ப அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் அனுமதி பெற்று மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் மனைவியை கேரளத்துக்கு அனுப்பி வைத்தார்.
மனைவி சொந்த ஊருக்கு திரும்பிய ஒரு மாதத்தில் கணவர் நிதின் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர் தனது உயிரை விட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும் அது தொடர்பாக சிகிச்சைகள் பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
நித்தின் உயிரிழந்த அதற்கு மறுநாள் ஆதிரா அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
துபையின் இந்தியத் துணைத் தூதர், நிதின் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.