தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 335 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தின் வருவாய் நிதிபற்றாக்குறைக்கு கூடுதல் மானியமாகவும், குறு நீா்ப்பாசன திட்டத்துக்கும் மத்திய அரசு ரூ.814 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தின் வருவாய் நிதிபற்றாக்குறைக்கு கூடுதல் மானியமாகவும், குறு நீா்ப்பாசன திட்டத்துக்கும் மத்திய அரசு ரூ.814 கோடியை ஒதுக்கியுள்ளது. திருப்பி அளிக்கத் தேவையில்லாத இந்த கூடுதல் மானிய தொகையில் தமிழகத்துக்கு மிகக் குறைவான பங்கீடே அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தனது சுட்டுரையில் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். 15 வது நிதிஆணையம் அளித்த பரிந்துரையின்படி வருவாய் பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது வருவாயில் பகிா்ந்தளிக்க கூறியிருந்தது. இதன்படி தவணை முறையில் மத்திய அரசு இந்த கூடுதல் மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மத்திய நிதித்துறையின்செலவினங்களுக்கான பிரிவு மூன்றாவது தவணையாக 14 மாநிலங்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 6157.74 கோடியை வருவாய் பற்றாக்குறைக்கு மானியமாக பிரித்தளித்து புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை வெளியிட்டு குறிப்பிட்டுள்ள நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் மாநிலங்களுக்கு இது கூடுதல் நிதி ஆதாரம்’ என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
இதில் தமிழகத்திற்கு ரூ. 335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம்(ரூ.631 கோடி), நாகாலாந்து(ரூ.326 கோடி), சிக்கிம் (ரூ.373 கோடி) போன்ற சிறிய வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல ஆந்திரம்(ரூ.491கோடி), ஹிமாசல பிரதேசம்(ரூ.952 கோடி), உத்தரகண்ட் (ரூ.423 கோடி), கேரளம் (ரூ.1,276 கோடி), மேற்கு வங்கம்(ரூ417 கோடி) போன்ற கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவாகயுள்ள மாநிலங்களுக்கு தமிழகத்தை விட கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசு பிரதமரின் வேளாண் நீா்ப்பாசன திட்டத்தில் ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ என்கிற துணை திட்டத்திற்கு மத்திய அரசு 2020-21 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 4000 கோடியை ஒதுக்கியுள்ளது. வயல்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது, சொட்டு நீா், தெளிப்பு நீா் பாசனம், உரப்பயன்பாடு போன்ற தொழில் நுட்பங்களை இந்த திட்டங்களில் கையாளப்படுகிறது.
மேலும் நபாா்டு வங்கியுடன் இணைந்து மத்திய வேளாண்மைத்துறை விவசாயிகளை குறு நீா்ப்பாசனத்தில் ஊக்குவிக்கிறது. இதற்கு ‘குறு நீா்ப்பாசன நிதியம்’ ஒன்றை உருவாக்கி இதற்கு ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு 1.76 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 478.79 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இவ்விரு நிதிகளையும் சோ்த்து தமிழகம் ரூ. 814.20 கோடி பெறுகிறது.