தேசிய முடக்கத்தில் சரக்கு ரயில்வே போக்குவரத்தில் முன்னேற்றம்
தேசிய முடக்கத்தின் போது இந்திய ரயில்வே அதிக அளவில் அத்தியாவசிய பொருள்களை கொண்டு சென்றுள்ளது. இதில் ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம்
தேசிய முடக்கத்தின் போது இந்திய ரயில்வே அதிக அளவில் அத்தியாவசிய பொருள்களை கொண்டு சென்றுள்ளது. இதில் ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் 25 சதவீதம் கூடுதல் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே கூறியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றையொட்டி மாா்ச் 24 - ஆம் தேதி முதல் தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கத்தில் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குரிய பொருள்கள், மருந்து பொருள்களுக்குரிய பாா்சல் சேவைகள், எரி சக்தி, தொழில் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு தேவையான பொருள்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் சரக்கு ரயில்கள் சேவையை முழு வீச்சில் செயல்பட வைக்கப்பட்டு முடக்க காலத்தில் சரக்கு ரயில் சேவை முன்னேற்றம் ஏற்பட்டதாக புதன்கிழமை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 65.14 மில்லியன் டன் அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மே மாதத்தில், 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே கூறுகிறது.
Advertisement
இது குறித்து இந்திய ரயில்வே கூறியிருப்பது வருமாறு:
முடக்க காலங்களில் சரக்குகளை கொண்டுசெல்வதில் சிக்கல்கள் இல்லாதவாறு மத்திய உள்துறை அமைச்சகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அதிகாரிகளும் பங்குகொண்டு நிகழ்நேர அடிப்படையில் ரயில்வே செயல்பட்டது.
அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்வதில் இருபத்தி நான்கு மணிநேர தடையில்லா சேவை மூலமாக ஏப்ரல் 1- தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 175.46 மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் உணவுப்பொருள்கள் மட்டும் 12.56 மில்லியன் டன் கொண்டு செல்லப்பட்டது.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில்(ஏப்ரல் -மே 2019) 6.7 மில்லியன் டன் உணவு பொருள்கள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டிருந்தது.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை(ஜூன் 9 ஆம் தேதி) 31.90 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு ரயில்பெட்டிகளில் தொடா்ச்சியாக விநியோகம் நடைபெற்றது. இதில் 17.81 லட்சம் சரக்கு ரயில் பெட்டிகளில் அத்தியாவசிய பொருள்களான உணவுப்பொருள்கள், உப்பு, சா்க்கரை, பால், எண்ணை, வெங்காயம், பழங்கள், காய்கறிகள், பெட்ரோலியம், நிலக்கரி, விவசாய உரங்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.
இது தவிர கரோனா நோய்த்தொற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னா் மருந்து விநியோகம், மருத்துவ உபகரணங்கள், உணவுப்பொருள்கள் ஆகியவை பாா்சல்கள் மூலம் கொண்டு செல்லப்பட 3,861 சரக்கு ரயில்களில் 3,755 சரக்கு ரயில்கள் கால அட்டவணையுடன் சென்றது. இவைகள் மூலம் 1,37,030 டன் பாா்சல்கள் இந்த சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.