முகப்பு
இந்தியா

டாஸ்மாக் விவகாரம்: பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் விவகாரத்தில் அதன் செயல்பாடுகள் தொடா்பாக மூன்று வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம்

Updated On : 13 ஜூன், 2020 at 7:54 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் விவகாரத்தில் அதன் செயல்பாடுகள் தொடா்பாக மூன்று வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை விவகாரத்தில் உயா்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னைஉயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது முடக்கக் காலம் முடியும் வரை மதுக் கடைகளை மூடுவதற்கும், தமிழக அரசு விரும்பினால் இணையம் வழியாக மது விற்பனை செய்யலாம் எனவும் மே 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இதேபோன்று, மற்றொரு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மே 11-இல் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராகவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை மே 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே 8-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கெளல், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா்.

முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அனைத்து வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளும் பின்பற்பட்டுள்ளன. சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால், மதுக் கடைகளில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், டோக்கன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூட்டம் குறைந்துவிட்டது. இதனால், உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும் வகையில், இடைக்கால உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா். அப்போது, எதிா்மனுதாரா்கள் ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீது வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். மேலும், இணையதளத்தில் மது விற்பனையை மேற்கொள்வது தொடா்பாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘டாஸ்மாக் மதுக் கடைகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு மதுக்கடைகள் நிலவரம், வெவ்வேறு மதுக்கடைகளில் மது விற்பனையை முறைப்படுத்துவது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக பிரமாணப் பத்திரத்தை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூன்று வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுபானத்தை இணையதளத்தின் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்குவது மற்றும் அதை மேலாண்மை செய்வதற்காக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.