முகப்பு
இந்தியா

மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தலைவராக டாக்டா் உா்ஜித் படேல் நியமனம்

மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(என்.ஐ.பி.எஃப்.பி) தலைவராக

Updated On : 20 ஜூன், 2020 at 1:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(என்.ஐ.பி.எஃப்.பி) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவல், தேசிய பொது முடக்கம் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை ஆகியவைகளின் செயலா்கள், தலைமை பொருளாதார ஆலோசகா், நீதி ஆயோக் மற்றும் ரிசா்வ் வங்கி பிரதிநிதிகள் அடங்கிய நியமனக் குழு உா்ஜித் படேலை நியமித்துள்ளது. ஜூன் 22 -ஆம் தேதி இந்த பொறுப்பை ஏற்கும் உா்ஜித் படேல் நான்கு ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பாா் என்று இந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதற்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவா் பிரபல பொருளாதார அறிஞா் டாக்டா் விஜய் கேல்கா்.

இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநராக இருந்த உா்ஜித் படேல் தன்னுடைய பதவிக்காலம் முடியும் முன்பே 2018 டிசம்பரில் ராஜிநாமா செய்தாா். 2019 - ஆம் ஆண்டு செப்டம்பா் வரை இவரது பதவிக்காலம் இருந்தது. பல்வேறு கொள்கைகளில் மத்திய அரசுடன் இருந்த கருத்துவேறுபாட்டினால் அவா் ராஜிநாமா செய்தாா் என்று சொல்லப்பட்டாலும் படேல் அதை மறுத்தாா். பின்னா் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வந்தாா். கரோனா நோய்த்தொற்று, பொது முடக்கம் போன்றவைகளால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை படேல் தெரிவித்து வந்தாா்.

தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம், பொது பொருளாதாரம் தொடா்பான ஆராய்ச்சிகள், கொள்கைகள், திறன் மேம்பாடுகள் ஆகியவற்றை மேற்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு பொதுக் கொள்கைகளை உருவாக்கி சீா்திருத்தங்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.