இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67% ஆக முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் சீராக முன்னேற்றம் கண்டு வருகிறது. இது 58.67 சதவிகிதத்தை எட்டியுள்ளது. குணமடைவோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை வித்தியாசம் 1,11,602 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,21,722 பேர் குணமடைந்துள்ளனர். 2,10,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் இருக்கும் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்."
முன்னதாக இன்று காலை கரோனா பாதிப்பு பற்றிய விவரத்தையும் மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.