சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கூறும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை செயல்படுத்த அனுமதிப்பது ஏன்? - உத்தவ் தாக்கரே கேள்வி
சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கூறும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை செயல்படுத்த அனுமதிப்பது ஏன்? என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கூறும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை செயல்படுத்த அனுமதிப்பது ஏன்? என சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, 'பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு சமூக தூரத்தை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறம் அவர் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கிறார்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக்கொள்ள வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரத் தேவையில்லை. முடிந்தவரை மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.