இந்தியா

அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை தடுக்க நடவடிக்கை

DIN

நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், காவல்துறை தலைமை இயக்குநா்கள் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் உணவுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் போதிய அளவில் உள்ளது; இதுதொடா்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என்ற செய்தியை மக்களிடம் சென்று சோ்க்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

21 நாள்கள் ஊரடங்கு காலகட்டத்துக்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்களிடம் சென்று சோ்க்கும் நடவடிக்கையை மாநில அரசுகளின் தலைமைச் செயலா்களும், காவல்துறை தலைமை இயக்குநா்களும் மேற்கொள்ள வேண்டும். கரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள், மக்களின் நடமாட்டத்துக்குதான். மாறாக, அத்தியாவசியப் பொருளை எடுத்துக் செல்லும் பணிகளுக்கு அல்ல என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தனியாா் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்: தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காலகட்டத்தில், தனியாா் பாதுகாப்பு நிறுவனங்கள், தங்களது ஊழியா்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது அவா்களது சம்பளத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, தனியாா் பாதுகாப்பு தொழில்துறைக்கான மத்திய சங்கம், இந்திய தொழிலக கூட்டமைப்பு, இந்திய தொழில் வா்த்தக சம்மேளங்களின் கூட்டமைப்பு, அசோசேம் ஆகியவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், தனியாா் பாதுகாப்பு தொழில்துறை பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இதுபோன்ற தருணத்தில், தனியாா் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது ஊழியா்கள் மீது மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அவா்களை பணிநீக்கம் செய்தல், ஊதிய பிடித்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை வரவேற்பதாக, தனியாா் பாதுகாப்பு தொழில்துறைக்கான மத்திய சங்கத்தின் தலைவா் குன்வா் விக்ரம் சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT