கரோனாவை வெல்லும் தாரக மந்திரம்: குஜராத்தில் குணமடைந்தவர்கள் சொல்வது என்ன?
சமூக இடைவெளியும், மனதில் தைரியமும்தான், கரோனாவை வெல்லும் தாரக மந்திரம் என்று குஜராத்தில் கரோனாவுடன் போராடி அதனை வென்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆமதாபாத்: சமூக இடைவெளியும், மனதில் தைரியமும்தான், கரோனாவை வெல்லும் தாரக மந்திரம் என்று குஜராத்தில் கரோனாவுடன் போராடி அதனை வென்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கரோனா பாதித்து அல்லது அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிச்சயம் இவர்களது அனுபவம் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளிக்கலாம்.
கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்த பெண் ஒருவர், தான் கரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியபிறகு, மனதளவில் மிகவும் சக்திமிக்கவராக உணர்கிறேன். மன தைரியம் தான் கரோனாவில் இருந்து நம்மை மீட்க உதவும் முக்கிய விஷயம் என்கிறார்.
மற்றொருவர் கூறுகையில், சமூக இடைவெளியும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதும் தான் கரோனாவில் இருந்து தப்பிக்க உதவும். நிச்சயம் அனைவரும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பின்லாந்தில் இருந்து திரும்பிய 34 வயது பெண்ணும், சவூதி அரேபியா சென்று திரும்பிய 60 வயதான ஒரு தம்பதியும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மூவரும் பூரண குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்கள்.
சூரத்தைச் சேர்ந்த 21 வயது பெண் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், நான் பெருந்தொற்றுநோயில் இருந்து தப்பி மிகத் தைரியமான நபராக வெளியே வந்துள்ளேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் கடவுளின் துணையில்லாமல் இதை என்னால் செய்திருக்க முடியாது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதேப்போல சிகிச்சை பெற்று மீண்டு வந்த பெண் ஒருவர், நீங்கள் வீட்டில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.