திருவனந்தபுரம்: கரோனா ஊரடங்கில் மருத்துவரிடம் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மது வீடி தேடி வரும் என்று கேரள அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது.
திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவேறு பகுதிகளில் கடந்த வெள்ளிகிழமை துவங்கி ஞாயிறு வரை ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் மரணம் நிகழ்ந்த உடனே மாநில அரசு, மாநில கலால் துறையின் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதை மீட்டெடுப்பு மையங்களும், மனநல பாதிப்படைந்து காணப்படுபவர்களுக்கு ஆலோசனை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது.
தற்போது ஐந்து பேர் வரை மரணமடைந்துள்ள நெருக்கடி நிலையைச் சமாளிக்க மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அத்துடன் இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் மாநில கலால் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அரசின் உத்தரவு குறித்த தகவல் வெளியானவுடனேயே பலர் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களிடம் இருந்து கடிதங்களைப் பெற்று, கலால் துறை அலுவலகங்கள் நோக்கி படையெடுத்தனர். ஆனால் அவை செல்லாது என்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மது வழங்குவதற்கு ஏதுவாக கேரள மாநில அரசு மருத்துவர்கள் பரிந்துரைக் கடிதம் வழங்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள மாநில மருத்துவர்கள் அமைப்பானது புதன்கிழமையை கருப்பு நாளாக அனுஷ்டிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கில் மருத்துவரிடம் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மது வீடி தேடி வரும் என்று கேரள அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில் கரோனா ஊரடங்கின் விளைவாக மாநிலம் முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பலர் மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களுக்காக இந்த வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதன்படி உரிய மருத்துவரிடம் இருந்து கடிதம் பெற்று கலால்துறையிடம் ஒப்படைப்போருக்கு ‘பாஸ்’ வழங்கப்படும். அதனை அவர்கள் மாநில மது விற்பனை ஆணையத்திடம் ஒப்படைத்தால் அவர்கள் வீட்டிற்கு வாரம் மூன்று லிட்டர் மது அனுப்பப்படும். மதுவின் பிரான்ட் மற்றும் விலை உள்ளிட்டவிஷயங்கள் இருப்பபைப் பொறுத்து முடிவு செய்யப்படும். ஒரு வாரத்திற்கு பிறகு இந்த நடைமுறையை மீண்டும் அவர்கள் தொடர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.