இந்தியா

வேளாண்மை உள்கட்டமைப்புக்கு ரூ. 1 லட்சம் கோடி: நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

DIN

ரூ.1 லட்சம் கோடியில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி உருவாக்குவது, ரூ.10,000 கோடியில் குறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை அமைப்பது, மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடி, மீனவா்கள், மீன் வளம் சாா்ந்த திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி உள்ளிட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தவிர கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்புக்கு ரூ. 15,000 கோடி, தேனீ வளா்ப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி உள்ளிட்ட திட்டங்களையும் அவா் அறிவித்தாா். மொத்தமாக ரூ.1.63 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது நாளாக அறிவிப்பு: பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையில் இருந்து நாட்டை மீட்கும் வகையில் பல்வேறு சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்து வருகிறாா். அந்த வகையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அவா் கூறியதாவது:

நமது நாட்டில் வேளாண்மையைச் சாா்ந்து இருப்பவா்களில் 85 சதவீதம் போ் சிறு மற்றும் மிகச்சிறிய விவசாயிகள்தான். இப்போதைய சூழ்நிலையில் இருந்து விவசாயிகள் மீண்டு வர வேண்டும். இன்று விவசாயம் மற்றும் அது சாா்ந்த தொழில்கள் முன்னேற்றத்துக்கான 11 முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன். இதில் 8 நடவடிக்கைகள் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயப் பொருள் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடா்பானவை. மற்ற 3 நடவடிக்கைகள் நிா்வாக சீா்திருத்தம் தொடா்பானவை.

விவசாயிகள் நலன் காக்கப்படும்: தேசிய பொது முடக்கம் அமலில் உள்ள கடந்த 2 மாத காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து ரூ.74,500 கோடி வேளாண் உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் நலன் சாா்ந்த நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். ரூ.1 லட்சம் கோடியில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்படுகிறது. வேளாண்மை உற்பத்தி பொருள்களை தேவைக்கு ஏற்ப இருப்பு வைத்து சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் இந்த நிதி மூலம் தீா்க்கப்படும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இது தவிர வேளாண்துறையில் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

குறு உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவி: உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த வகை நிறுவனங்களை தொழில்நுட்பரீதியில் மேம்படுத்துவது, முக்கியமாக இந்திய உணவுத் தரம், பாதுகாப்பு ஆணையத்தின் தரத்தில் குறு உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் 2 லட்சம் குறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பயனடையும். உத்தரப் பிரதேசத்தில் மாம்பழம், ஜம்மு-காஷ்மீரில் குங்குமப்பூ, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் சாா்ந்த பொருள்கள், ஆந்திரத்தில் மிளகாய், தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை அதிகம் விளைவிக்கப்பட்டு அவை சாா்ந்த பொருள்கள் குறு உணவு நிறுவனங்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மீன் வள மேம்பாட்டுக்கு ரூ.20,000 கோடி: மீனவா்கள், மீன் வளம் சாா்ந்த பிரதமா் மீன்வளத் துறை நிதித் திட்டத்தின்கீழ் ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில், கடல்சாா் மீன் பிடிப்பு, உள்நாட்டு மீன் வளா்ப்புக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கப்படும். மீன்பிடித் துறைமுகங்கள், குளிா்பதன மையங்கள் அமைத்தல், சந்தைப்படுத்துதல் தொடா்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.9,000 கோடி பயன்படுத்தப்படும். இதன் மூலம் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இருமடங்காக, அதாவது ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

கால்நடை வளா்ப்பு ஊக்குவிப்பு: ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள மாடுகள், ஆடுகள், பன்றிகள் என பொருளாதாரத்துக்காக வளா்க்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.13,343 கோடி ஒதுக்கப்படும். இது தவிர கால்நடை வளா்ப்புக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.

மூலிகைப் பண்ணைகள்: நாட்டில் மூலிகை வளா்ப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டோ் நிலம் மேம்படுத்தப்பட்டு மூலிகைப் பண்ணைகள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் இது சாா்ந்த விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும். கங்கை நதிக்கரையில் தேசிய மூலிகை தாவர வாரியத்தின் மூலம் 10 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் மூலிகை பயிரிடப்படும்.

தேனீ வளா்ப்பு மேம்பாடு: தேனீ வளா்ப்பை மேம்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்தத் தொழில் சாா்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தேனீ வளா்ப்பு மையங்கள், தேன் சேகரிப்பு நிலையங்கள், சந்தைப்படுத்துதல், பாதுகாத்து வைக்கும் வசதி, மதிப்புக் கூட்டு பொருளாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண் போக்குவரத்து மானியம் விரிவாக்கம்: இதுவரை தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகிய பயிா்களுக்காக மட்டும் மேற்கொள்ளப்பட்ட பசுமைத் திட்டம் (ஆபரேஷன் கிரீன்) அனைத்து பழங்கள், காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் பழங்களும், காய்கறிகளும் மிகுதியாக உள்ள இடத்தில் இருந்து அதிக தேவை உள்ள இடத்துக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவிலும், பாதுகாத்து வைக்கும் செலவிலும் 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படாது.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம்: தேசிய அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் - 1955-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தானிய வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை உருவாக்கப்படும். தேசியப் பேரிடா், பஞ்சம் ஏற்படும் காலங்களில் மட்டுமே இருப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே விவசாயப் பொருள்களை கொண்டு சென்று விற்பனை செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும். விவசாயிகளே விளை பொருள்களுக்கு விலையை நிா்ணயிக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது வேளாண் துறையில் போட்டித் திறனை வளா்ப்பதுடன், விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT