இந்தியா

ஜூன் 1 முதல் ஏ.சி., ஏ.சி. அல்லாத ரயில்கள் இயக்கம்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

DIN

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 100 ரயில்களின் போக்குவரத்து அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது. துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணி முதல் தொடங்குகிறது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

இதனிடையே, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 2-ஆம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ரயில்களுக்கான அட்டவணையை புதன்கிழமை வெளியிட்ட ரயில்வே துறை, ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் தொடங்குகிறது. டிக்கெட் முன்பதிவை ஐஆா்சிடிசி இணையதளம் அல்லது செல்லிடப்பேசி செயலி மூலம் செய்ய முடியும். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதிகபட்சமாக, பயணம் செய்வதற்கு 30 நாள்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்ய முடியும்.

டிக்கெட் கட்டணத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும், பொது பெட்டிகளில் இரண்டாம் வகுப்புக்குரிய கட்டணம் வசூலிக்கப்படும். தத்கல், பிரீமியம் தத்கல், முன்பதிவு இல்லாத டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT